Monday, July 9, 2007

விவேகானந்தர் நினைவு தினம் இன்று!




ஜூலை 4-ம் தேதி விவேகானந்தர் நினைவுநாள். விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. கூகிளில் தேட நேரம் இல்லை.

ஒவ்வொரு நாள் பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடாக இருக்கிறது. அதுக்கு ஏற்றாற்போல் வழக்கமான நண்பர் குழாமும் அவங்க அவங்க வேலையிலே ரொம்ப பிசி!. என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதறேன்.



முதன்முதல் வெளிநாடு சென்று அங்கே நம் நாட்டுக் கலாசாரத்தைப் பரப்பியவர்களில் ஒருவர் விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய உரை உள்ள புத்தகம் கூட இந்தியாவிலே விட்டுட்டு வந்திருக்கேன்.(ஏற்கெனவே நான் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களால் எடை ரொம்ப அதிகம் ஆயிட்டதுன்னு மறுபாதி ஒரே புலம்பல்) "என்னருமை அமெரிக்க நாட்டு சகோதர, சகோதரிகளே!" என அவர் தன் உரையை ஆரம்பித்த கணம் ஏற்பட்ட கைதட்டல் ஒலி வெகு நேரத்துக்குக் கேட்டதாய்ச் சொல்லுவார்கள். எவ்வளவு பரந்த மனம் இருந்தால் அனைவரையும் தன் சகோதர, சகோதரியாக எண்ணி இருப்பார்?

அவரை அமெரிக்க நாட்டிற்குப் போகப் பணம் உதவி செய்து அவரை அனுப்பி வைத்துப் பின் வரவேற்பு செய்தது ஒரு தமிழர்! யார் தெரியுமா? ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்கள் தான். முதலில் ராஜாவே போவதாய்த் தான் இருந்தார். பின்னர் விவேகானந்தர் பத்திக் கேள்விப் பட்டு தன்னை விட அவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்து அவரை அனுப்பி வைத்தார்.

விவேகானந்தர் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு பெண்மணி அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம் கேட்க அந்தப் பெண்மணி விவேகானந்தர் போல் ஒரு மகன் தனக்கு வேண்டும் எனவும் அதற்கு அவரைத் திருமணம் செய்து கொண்டால்தானே முடியும் எனவும் சொன்னாராம்.

அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம், "தாயே, இந்த நிமிஷம் முதல் நான் உங்கள் மகன், என்னையே நீங்கள் உங்கள் மகனாக எண்ணிக் கொள்ளலாம்." என்று சொன்னாராம். அந்தப் பெண்ணிற்குப் பேச்சு எழவில்லை. இத்தனை சிறிய வயதில் இவ்வாறு நினைக்க மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும்? இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது.

விவேகானந்தர் வெளிநாட்டில் நம் கலாசாரத் தூதுவராய்ச் சென்று திரும்பி வரும்போது அவரை சேதுபதி மகாராஜாவைத் தவிர வேறு யாரும் வரவேற்கவில்லை. ஆஸ்தீக இந்துக்கள் அவர் கடல் கடந்து சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1905-ம் ஆண்டு பாரதியார் "காசி காங்கிரஸ்" மகாநாடு சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை ஆன சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்துத் தன் ஆன்மீக குருவாக ஏற்றார்.

ஆன்மீகத் தேடலில் தன்னிறைவு பெற்ற விவேகானந்தரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றியதாக சக்கரவர்த்தி ராஜாஜியும், புதிய நவீன இந்தியாவின் ஸ்தாபகர் என்று சுபாஷ் சந்திர போஸாலும், விவேகானந்தரின் நாட்டுப் பற்று மிகுந்த கட்டுரைகளைக் காந்தியும் மேற்கோள் காட்டி இருக்கின்றனர். காந்தி விவேகானந்தரின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

விவேகானந்தர் இறந்த பல வருஷங்களுக்குப் பின்னர், ரவீந்திர நாத் தாகூர், "இந்தியாவை அறிய வேண்டுமா? விவேகானந்தரின் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். இத்தனை நேர்மறையான சிந்தனைகளுடன் உள்ள இளைஞர் அவரைத் தவிர யாரையும் பார்த்தது இல்லை!" என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினம் ஆன ஜனவரி 12-ம் தேதி இந்தியாவில் இளைஞர்கள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பூபேந்திர தத்தா என்ற சுதந்திரப் போராட்டப் புரட்சி வீரரின் சகோதரர் ஆன விவேகானந்தரைத் தன் குருவாக அரவிந்தரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார். அன்றைய நாட்களில் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்புவதற்காக அவர் சொன்ன சொல்: விழிமின்! எழுமின்! கேண்மின்! இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும்.


GEETHA SAMBASIVAM

நன்றி -

http://groups.google.com/group/nambikkai/browse_thread/thread/588bc902012c1e35/fde74686a95080f6

1 comment:

sdf said...

Your Blogpsot is Very Good. I like it.